தனித்தேர்வர்கள் 3 மாதத்துக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்:தூத்துக்குடி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்

2017, 2018 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 3 மாதத்துக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தர்மராஜ் தெரிவித்து உள்ளார்

Update: 2021-12-07 10:43 GMT
தூத்துக்குடி:
2017, 2018-ம் ஆண்டு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 3 மாதத்துக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தர்மராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதிப்பெண் சான்றிதழ்கள்
நடந்து முடிந்த மேல்நிலை 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2017, ஜூன் 2017, செப்டம்பர் 2017, மார்ச், ஜூன், செப்டம்பர் 2018-ம் ஆண்டு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டது. தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் மேல்நிலை 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய தனித்தேர்வர்களின் அசல் பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை மீண்டும் தூத்துக்குடி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து உள்ளன.
அரசு தேர்வுத்துறை விதிமுறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 2 ஆண்டுகள் மட்டுமே அந்த தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்கள் இந்த அலுவலகத்தால் பராமரிக்கப்படும். மேலும் தனித்தேர்வர்களால் பெற்றுக் கொள்ளப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்படும்.
3 மாதத்துக்குள்..
எனவே மேற்கண்ட 6 பருவங்களுக்கான மேல்நிலை தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்கள் இன்னும் 3 மாதங்களுக்குள் அலுவலக பணி நாள் மற்றும் அலுவலக வேலை நேரத்தில் தேர்வுக்கூட நுழைவு சீட்டுடன் நேரில் அணுகியோ அல்லது ரூ.45 மதிப்புள்ள தபால் வில்லை ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறை மற்றும் தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்துடன் தேர்வுக்கூட நுழைவு சீட்டு இணைத்து இந்த அலுவலகத்துக்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும். 
தவறும் பட்சத்தில் மேற்கண்ட 6 பருவத்துக்கு உரிய மேல்நிலை தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுத்துறை விதிகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்