த.மு.மு.க.-எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க.-எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-12-07 04:54 GMT
நாகர்கோவில்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க.-எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, குமரி மாவட்ட த.மு.மு.க. சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இதற்கு மாவட்ட தலைவர் செய்யது தலைமை தாங்கினார். செயலாளர் சத்தீக், பொருளாளர் பைரோஸ் காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் உள்பட ஏராளமான பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 
இதே போல் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பாபர் மசூதி நிலத்தை மீண்டும் மீட்டெடுத்து முஸ்லிம்களுக்கு வழங்கக்கோரியும், பாபர் மசூதி இடித்ததை கண்டித்தும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இதற்குநாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் முகமது சுபைர் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சத்தார் அலி, செயற்குழு உறுப்பினர் ரபீக் பிர்தவ்சி, மாநகர தலைவர் மீரா முகைதீன் தங்கப்பா,  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி முகமது ஜின்னா ஆகியோர் பேசினார்கள்.
கோஷம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மைக் வைத்து பேசுவது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக திட்டுவிளை பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொகுதி பொருளாளர் நூர் முகமது தலைமை தாங்கினார் இதில் பச்சைத் தமிழகம் தலைவர் சுப. உதயகுமார், மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்