மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சேலம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். என்ஜீனியரான இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்த ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த மணி மற்றும் செல்வகுமார் ஆகியோர் ரூ.17 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மணி, செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணியை கடந்த வாரம் போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். செல்வகுமாரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு மணி சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு கலைவாணி உத்தரவிட்டார்.