தாத்தா, சித்தியை கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
தாத்தா, சித்தியை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சேலம்:
தாத்தா, சித்தியை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கொலை செய்ய முயற்சி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள இலுப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 29). இவர் தனது தாத்தா கலியன் (65) என்பவரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தி வந்தார். அதற்கு அவர், பேரனிடம் ஒழுங்காக வேலைக்கு செல், அதன்பிறகு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி தாத்தா குடிசைக்கு தீ வைத்ததுடன் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றார். மேலும் அவரை தடுக்க வந்த சித்தி கலாவையும் அவர் கத்தியால் குத்தினார்.
இதைத்தொடர்ந்து தாத்தா, சித்தியை கொலை செய்ய முயன்ற கண்ணன் மீது வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் தாத்தா மற்றும் சித்தியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனயும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.