கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடப்படும் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் பள்ளி-கல்லூரிகள் மூடப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்துள்ளார்.

Update: 2021-12-06 21:31 GMT
பெங்களூரு:
  
பள்ளி, கல்லூரிகளில் பரவும் கொரோனா

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை முடிந்து கடந்த 3 மாதங்களாக ெதாற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) இறுதி முதல் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தார்வாரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள், டாக்டர்கள், ஊழியர்கள் என 280-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

  அதுபோல் பெங்களூரு ஒயிட்பீல்டுவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியிலும் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மேலும் பெங்களூரு புறநகர் ஆனேக்கல்லில் ஒரு கல்லூரியில் 33 மாணவர்களும் கொேரானா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூரில் உள்ள நவோதயா உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 107 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளித்து கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் பீதி

  சமீப காலமாக பள்ளி-கல்லூரிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடகத்தில் மீண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பள்ளி-கல்லூரிகள் மூடப்படும்

  கர்நாடகத்தில் சில பள்ளி-கல்லூரிகளில் கொரோனா பரவி இருப்பது பெற்றோருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எங்களுக்கும் பயத்தை உண்டாக்கி இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்தால் பள்ளி-கல்லூரிகள் மூடப்படும். இதுகுறித்து முடிவு எடுப்பதில் அரசு தயக்கம் காட்டாது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

  நவோதயா உள்பட சில உண்டு உறைவிட பள்ளிகளில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இது எங்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி-கல்லூரிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. தற்போது பரவும் கொரோனா வைரஸ், தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் பெற்றோர் பயப்பட தேவை இல்லை.

  குழந்தைகளின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பெற்றோர் ஆதங்கப்படுகிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். உண்டு உறைவிட பள்ளிகளை கலெக்டர்கள் மற்றும் பிற துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். நானும் உண்டு உறைவிட பள்ளிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன்.

நேரடி வகுப்புகள்

  கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு என்று தனியாக வழிகாட்டுதலை வெளியிட உள்ளோம். கொரோனாவிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், நேரடி வகுப்புகள், தேர்வு உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும்.
  இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

மேலும் செய்திகள்