என்.ஆர்.புரா அருகே அரசு பள்ளியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று; பாதித்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

என்.ஆர்.புரா அருகே அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-12-06 21:20 GMT
சிக்கமகளூரு:

உண்டு உறைவிட பள்ளி

  சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் அருகே மத்திய அரசின் நவோதயா உண்டு உறைவிட பள்ளி உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டு உறைவிட பள்ளியில் ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவ ஊழியர்கள், உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர்கள், அனைத்து மாணவ-மாணவிகளின் ரத்தம், சளிமாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

69 பேருக்கு பாதிப்பு

  இதில் சிலரின் பரிசோதனை அறிக்கை கடந்த 4-ந்தேதி வெளியானது. அதில் தலைமை ஆசிரியர், ஊழியர்கள் உள்பட 7 பேர், 61 மாணவ-மாணவிகள் தொற்றால் பாதித்து இருப்பது தெரியவந்தது. இதனால் உண்டு உறைவிட பள்ளியில் மொத்தம் 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

  அவர்களை, உண்டு உறைவிட பள்ளியிலேயே தனிமைப்படுத்தி டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தப்படுத்தி உண்டு உறைவிட பள்ளி சீல் வைத்து மூடப்பட்டது.

மேலும் 38 பேருக்கு கொரோனா

  இந்த நிலையில் நேற்று வந்த பரிசோதனை அறிக்கையில் அங்கு படித்து வந்த மேலும் 38 மாணவ, மாணவிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர்களுக்கும் பள்ளியிலேயே சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   இதன்மூலம் உண்டு உறைவிடப்பள்ளியில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உண்டு உறைவிடப்பள்ளி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பீதியில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு, பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பயப்பட வேண்டாம்

  இதுபற்றி சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறியதாவது:-

  உண்டு உறைவிடப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஊழியர்கள், மாணவர்கள் என 107 பேர் ெதாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். லேசான பாதிப்பு உள்ளதால் அவர்கள் ஒருவார காலத்தில் குணம் அடைந்து விடுவார்கள். அதனால் பெற்றோர் பயப்பட வேண்டாம்.

  டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் தொற்றால் பாதித்த மாணவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை, ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்