குவிந்து கிடக்கும் குப்பை
அந்தியூரில் இருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் பட்லூர் நால்ரோடு பகுதி உள்ளது. இங்கு ரோட்டோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது குப்பைகள் காற்றில் பறந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது படுகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம், பட்லூர்.
பூங்காவை பராமரிக்க வேண்டும்
கோபிசெட்டிபாளையம் கோசலை நகர் கிருஷ்ணன் வீதியில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அருகே உள்ள வீடுகளுக்குள் படையெடுக்கிறது. குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடனே பூங்காவை பராமரித்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
பவானிசாகர் தேசியபாளையம் ஊராட்சி கருப்பகவுண்டன்புதூர் சாலையின் இருபக்கமும் செடி, கொடிகள், வளர்ந்து ரோட்டை ஆக்கிரமித்தபடி உள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். உடனே ரோட்டை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கருப்பகவுண்டன்புதூர்.
சமுதாய நலக்கூடம் வேண்டும்
அம்மாபேட்டை ஒன்றியம் மாணிக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டிபாளையத்தில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த சமுதாய நலக்கூடம் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தொட்டிபாளையத்தில் உடனே சமுதாய நலக்கூட கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு.சிலம்பரசன், தொட்டிபாளையம்.
குப்பைகள் அள்ளப்படுமா?
ஈரோடு லக்காபுரம் ரிங்ரோடு பகுதியில் ரோட்டின் ஓரத்தில் பலர் குப்பைகளை போட்டு சென்று விடுகிறார்கள். இந்த குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று அடிக்கும் நேரத்தில் இந்த குப்பைகள் பறக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர், சின்னியம்பாளையம். ஈரோடு.
தேங்கிய மழை நீர்
ஈரோடு பெரியசடையம்பாளையத்தில் மழை நீர் சேகரிப்பு குளம் உள்ளது. இந்த குளத்தில் மழை நீர் தற்போது தேங்கி கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஆனால் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் குளத்தின் முன்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குளத்தின் அழகை பார்க்க உள்ளே செல்லமுடியாமல் உள்ளது. உடனே மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரியசடையம் பாளையம், ஈரோடு.
தார்சாலை அமைக்கப்படுமா?
சத்தியமங்கலம் தாலுகா சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது பாரதிநகர். இங்கிருந்து சிக்கரசம்பாளையம் செல்லும் மண் பாதை மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். உடனே மண்பாதையை தார்சாலையாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர், சிக்கரசம்பாளையம்