பெருந்துறை சீனாபுரத்தில் கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்- கலெக்டரிடம் பா.ஜ.க. கோரிக்கை மனு
பெருந்துறை சீனாபுரத்தில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு
பெருந்துறை சீனாபுரத்தில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்து மக்கள் கட்சி சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பவானி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 23 இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பெண்களை வைத்து லாட்டரி சீட்டுகளை எழுதி வாட்ஸ்அப் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், லாட்டரி சீட்டு பணத்தை செலுத்தி தங்களது வருமானத்தை இழந்து வருகின்றனர். பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பவானி பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.
தாயகம் திரும்பியோர்
தாயகம் திரும்பியோரின் தாயக மக்கள் வாழ்வுரிமை நலச்சங்க மாநில தலைவர் துரைராஜ் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி பல ஆண்டுகளாக வீடு இல்லாமல் வாழ்கிறோம். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு, வீடு அல்லது மனை வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டோம். எங்களுடைய மனுவை பரிசீலித்து சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
ஆனால் இதுவரை எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வீடு பெற அரசு நிர்ணயம் செய்துள்ள ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த தயாராக உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு வீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
கோவில் இடம் ஆக்கிரமிப்பு
பாரதீய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் சசிதயாள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
சீனாபுரத்தில் மிகவும் பழமையான கைலாயநாதர் கோவில் உள்ளது. ஆரம்ப காலத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் கோவில் பாழடைந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி, அறநிலையத்துறை அந்த கோவில் பராமரிப்பு, கோவில் நிலங்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கையை கைவிட்டது.
தற்போது இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி உள்ளனர். இதுபற்றி தொடர்ந்து மனு வழங்கியும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்களை அகற்றி கோவிலை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
274 மனுக்கள்
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மொத்தம் 274 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், உதவி ஆணையாளர் (கலால்) ஜெராணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி, மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.