திருப்பூரில் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
திருப்பூரில் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
திருப்பூர்,
திருப்பூரில் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. முக்கிய சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கொட்டித்தீர்த்த மழை
திருப்பூர் மாநகரில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. குறிப்பாக திருப்பூர் வ.உ.சி.நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்தனர். காலியிடங்களில் தண்ணீர் தேங்கியது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
திருப்பூர் மாநகரில் உள்ள பல சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் ஆற்றின் பாலத்தின் மேல்பகுதி சேறும், சகதியுமாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அவதியடைந்தனர். அதுபோல் நொய்யல் ஆற்றின் கரையோர சாலைகளும், யூனியன் மில் ரோடு ஆகியவை சேறும், சகதியுமாக காணப்பட்டது. சாலைப்பணிகள், குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் போன்றவை காரணமாக சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது.
திருப்பூரில் அதிகம்
நேற்று காலை 7 மணி வரை பெய்த மழையளவு விவரம் வருமாறு-
திருப்பூர் வடக்கு பகுதியில் 50 மில்லி மீட்டரும், அவினாசியில் 8 மி.மீ., பல்லடத்தில் 42 மி.மீ., ஊத்துக்குளியில் 14 மி.மீ., காங்கேயத்தில் 12.20 மி.மீ., குண்டடத்தில் 4 மி.மீ., திருமூர்த்தி அணையில் 10 மி.மீ., அமராவதி அணையில் 4 மி.மீ., உடுமலையில் 72 மி.மீ., மடத்துக்குளத்தில் 31 மி.மீ., திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 28 மி.மீ., திருப்பூர் தெற்கு பகுதியில் 48 மி.மீ., கலெக்டர் குடியிருப்பு பகுதியில் 87.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.