பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் 3 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் 3 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாணவ-மாணவிகளுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் கேரளாவில் இருந்து வந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் பாடம் எடுத்த வகுப்புகளை சேர்ந்த மாணவ- மாணவிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையறிந்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கு விடுமுறை
பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் இருந்து வரும் ஆசிரியர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து வகுப்பறைகள், மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்றும், நாளையும் தொடர்ந்து 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இதை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் 240 மாணவ- மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.