பாதை வசதி கேட்டு பொதுமக்கள் தர்ணா; தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

பாதை வசதி கேட்டு தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-06 17:10 GMT
தேனி:
பாதை வசதி கேட்டு தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
கூட்டத்தில் மனு அளிக்க புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜதுரை தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். அவர்கள் கையில், ஏராளமான பழைய மனுக்களை பொதிமூட்டையாக கட்டி தூக்கி வந்தனர். அவர்களிடம் கேட்டபோது, "தேனி மாவட்டம் உருவான காலத்தில் இருந்து பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள், பஞ்சமி நிலங்களை போலி ஆவணம் மூலம் அபகரிக்க துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் அளித்த ஏராளமான மனுக்கள் தீர்வு காணப்படாமல் உள்ளது. எனவே, தீர்வு காணப்படாத மனுக்களின் நகல்களை மூட்டை கட்டி எடுத்து வந்துள்ளோம். அதை கலெக்டரிடம் காண்பித்து, ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் மணவாளன் மோசடி செய்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி மனு அளிக்கவும் வந்துள்ளோம்" என்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துச் சென்றனர்.
தர்ணா போராட்டம்
தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கக்கன்ஜி நகரில் 90 ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனி நபர் அடைத்து வைத்துள்ளதாகவும், தங்களுக்கு அந்த பாதையை மீட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது புதிய பாதை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு மதுரை சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் நுழைவு வாயிலை கடந்து அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி அலுவலக வளாகத்துக்குள் மக்கள் நுழைந்தனர். அங்கு தரையில் அமர்ந்து மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் கைது செய்ய குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இதனால், போலீசாரை பொதுமக்கள் சூழ்ந்து போராட்டம் நடத்தியதால் கைது நடவடிக்கையை போலீசார் கைவிட்டனர்.
இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் விமலாராணி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதை வசதி ஏற்படுத்திக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து எழுச்சி முன்னணி
இதேபோல், இந்து எழுச்சி முன்னணியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளில் இறைவணக்கம் பாடுவதற்கு தடை விதித்ததை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தேனி கோர்ட்டில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிய சிலர் கொடுத்த மனுவில், "வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேனி கோர்ட்டில் தற்காலிக பணியாளர்களாக 40 பேர் நியமிக்கப்பட்டோம். 11 மாதங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த மாதம் பணியில் இருந்து நிறுத்தப்பட்டோம். எங்களின் குடும்ப வறுமை கருதி மீண்டும் எங்களுக்கு அந்த பணியை வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
ஆக்கிரமிப்பு
பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை காந்திநகர் காலனியை சேர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி கோரிக்கை மனு கொடுத்தனர்.
கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன் கொடுத்த மனுவில், கருநாக்கமுத்தன்பட்டியில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளாகவும், படிக்கட்டுகளாகவும், சுற்றுச்சுவர், மாட்டுகொட்டகை என கட்டியுள்ளனர். இதனால் வளர்ச்சி திட்டப்பணிகளை செய்ய முடியவில்லை. ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது, எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்