ஆலமரத்தால் சேதமடையும் அரசு பள்ளி கட்டிடம்
சாணார்பட்டி அருகே ஆலமரத்தால் அரசு பள்ளி கட்டிடம் சேதம் அடைந்து வருகிறது.
கோபால்பட்டி
சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி உள்ளன.
மேலும் பள்ளியின் பின்புறத்தில் உள்ள வகுப்பறை கட்டிடங்களின் அருகே பெரிய ஆலமரம் உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் மற்றும் விழுதுகளால் வகுப்பறை கட்டிடம் சேதமடையும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் பள்ளியின் இருபுறத்திலும் உள்ள 2 குளங்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் பள்ளிக்கு வந்த வண்ணம் உள்ளன.
இதனால் பாதுகாப்பற்ற சூழலில், மாணவிகள் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே கட்டிடங்களை சேதப்படுத்தும் ஆலமரத்தை வெட்டி அகற்ற வேண்டும். குளங்களில் இருந்து விஷபூச்சிகள் பள்ளிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.