வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு; ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
ஆண்டிப்பட்டி:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
வைகை அணை
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, போடி, கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வைகை, கொட்டக்குடி, சுருளி ஆறுகளில் நீர்வரத்து நள்ளிரவில் அதிகரித்தது.
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையை பொறுத்தவரையில் ஏற்கனவே முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்தது.
கொட்டித்தீர்த்த கனமழை
இந்தநிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. நேற்று அதிகாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 559 கனஅடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
காலை 6 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 681 கன அடியாக குறைந்தது. மேலும் அணையின் நீர்மட்டம் 70.11 கன அடியாகவே நீடித்து வருகிறது.
ஆற்றில் வெள்ளம்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இருகரைகளையும் தொட்டபடி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக அணைக்கு அருகில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை ஆறு பாயும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.