தர்மபுரியில் மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி - ராக்கிங் தொல்லையா அதிகாரிகள் விசாரணை

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதற்கு ராக்கிங் தொல்லையா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-12-06 08:09 GMT
தர்மபுரி,

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 19). இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரை இக்கல்லூரியில் படிக்கும் சில சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சரவணன், டெல்லியில் உள்ள மருத்துவக்கல்லூரி கமிட்டிக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சரவணனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வரும் 2 விடுதி வார்டன்கள், ஒரு டாக்டரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதையடுத்து, விசாரணைக்கு உள்ளானவர்கள், இதை பெரிது படுத்த வேண்டாம் என மாணவரிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரவணன், அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விடுதியில் மயங்கி கிடந்தார்.  தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி மற்றும் அதிகாரிகள் 2 வார்டன்கள் மற்றும் ஒரு டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மருத்துவ மாணவர் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்