2023-ம் ஆண்டு வரை முதல்-மந்திரி பதவியில் பசவராஜ் பொம்மை நீடிப்பார் - மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி
2023-ம் ஆண்டு வரை முதல்-மந்திரி பதவியில் பசவராஜ் பொம்மை நீடிப்பார் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
பெங்களூரு:
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதா கூட்டணி
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றும் திட்டம் இல்லை. அவர் முதல்-மந்திரி பதவியில் வருகிற 2023-ம் ஆண்டு வரை நீடிப்பார். முதல்-மந்திரி மாற்றம் தொடர்பாக யாரும் கருத்துகளை கூறக்கூடாது என்று மாநில தலைவர்களுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மேல்-சபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி வைப்பது பற்றி எனக்கு தெரியாது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் முடிவு எடுப்பார்கள்.
பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று நான் நினைக்கிறேன். ஹாசனில் ஐ.ஐ.டி. கல்லூரி தொடங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தேவேகவுடா பேசியதாக நான் அறிகிறேன். கர்நாடக பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷன் லஞ்சமாக பெறப்படுவதாக காங்கிரஸ் குறை சொல்கிறது. அதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா?. இருந்தால் விசாரணை அமைப்புகளிடம் இதுபற்றி புகார் கொடுக்கலாம்.
குடிநீர் இணைப்பு வசதி
முன்பு காங்கிரஸ் அரசில் 10 சதவீத கமிஷன் விவகாரம் நடப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். அதற்கு ஆதாரங்கள் இருந்ததால் அவர் அந்த குற்றச்சாட்டை கூறினார். மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும். மத்திய அரசின் நடப்பு பட்ஜெட்டில் கிராமங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.