தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளை போலீஸ் ஏட்டுகள் மீது மோதி தப்பிக்க முயன்ற சாராய வியாபாரி கைது
தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளை போலீஸ் ஏட்டுகள் மீது மோதி தப்பிக்க முயன்ற சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் இருந்து கவர்பனை செல்லும் ரோட்டில் ராமசேஷபுரம் கிராமத்தை சேர்ந்த பாபு (வயது 29) என்பவர் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும், வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் தலைமையில் ஏட்டுகள் சத்திய மூர்த்தி, ரமேஷ் மற்றும் போலீசார் அவரை விரட்டி பிடிக்க சென்றனர். அப்போது பாபு, போலீஸ் ஏட்டுகள் சத்தியமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் மீது மோட்டார் சைக்கிளை மோத விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் வீரகனூர் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அதே நேரத்தில் சாராய வியாபாரி பாபு ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டுகள் சத்தியமூர்த்தி, ரமேஷ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய பாபுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.