திருச்சி ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை
திருச்சி ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது
திருச்சி
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் மோப்பநாய் மேக்ஸ் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் நடைமேடை, சுரங்கப்பாதை, காத்திருப்போர் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினார்கள். மேலும், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உைடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. மேலும், பார்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து பார்சல்களிலும் சோதனை நடத்தப்பட்டபிறகு தான் ரெயில்களில் ஏற்றப்பட்டன. இதுதவிர, திருச்சியில் உள்ள ரெயில்வே பாலங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் நேற்று நள்ளிரவு திருச்சி ரெயில் நிலையம், பஸ்நிலையங்கள் உள்பட மாநகர் முழுவதும் முக்கிய இடங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை கமிஷனர்கள் முத்தரசு, சக்திவேல் மற்றும் உதவி கமிஷனர்கள் உடன் இருந்தனர்.