இயற்கை விவசாயத்துக்கு மானியத்தொகையை உயர்த்த நடவடிக்கை-அமைச்சர் மூர்த்தி தகவல்

இயற்கை விவசாயத்துக்கு மானியத்ெதாகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

Update: 2021-12-05 20:50 GMT
மதுரை,

இயற்கை விவசாயத்துக்கு மானியத்ெதாகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

முப்பெரும் விழா

உலக மண்வள தினம், ஒருங்கிணைந்த பண்ணையம், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கம் ஆகிய முப்பெரும் விழா மதுரை வேளாண்மை கல்லூரியில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட்டை உருவாக்கினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயிகளுக்கு பயன்படுகின்ற வகையில் பெரியாறு அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு தேவைக்கு அதிகமாக வேளாண் உற்பத்தி உள்ளது.

மானியத்தொகை

வேளாண் பெருமக்கள் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த இதுதான் உகந்த காலமாக இருக்கும். கிராமப்புறங்களில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இயற்கை விவசாயத்திற்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

முருங்கை

மதுரை மாவட்டத்தை தலைநகராக வைத்து 6 மாவட்டங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளால் முருங்கை மூலமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படும். இனிவரும் காலங்களில் தோட்டக்கலைத்துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் முருங்கையை விவசாயிகள் பயிர்செய்து பயன் அடைய வேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. முதல்-அமைச்சரின் திட்டங்களால் நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் பூமிநாதன் எம்.எல்.ஏ., வேளாண்மை கல்லூரி முதல்வர் பால்பாண்டி, வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், தனி இயக்குனர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்