பெண் பலாத்காரம் சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
புகார் கொடுக்க சென்ற ெபண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் கருவை கலைத்ததாக கூறப்பட்ட டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழித்துறை:
புகார் கொடுக்க சென்ற ெபண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் கருவை கலைத்ததாக கூறப்பட்ட டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண் பலாத்காரம்
களியக்காவிளை அருகே உள்ள பளுகல் போலீஸ் நிலையத்தில் 2019-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக சுந்தரலிங்கம் என்பவர் பணியாற்றி வந்தார். தற்போது இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் மீது களியக்காவிளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் குழித்துறை கோர்ட்டில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டது. இந்த நிலையில் எனக்கும், இன்னொரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு ஏமாற்றி ெசன்றார். இதுதொடர்பாக பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் எனக்கு உதவுவது போல் பேசி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கருவுற்றேன். எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
கருக்கலைப்பு
இதற்கு சிகிச்சை அளிப்பதாக என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு சுந்தரலிங்கம் அழைத்து சென்றார். அங்கு எனக்கு தெரியாமல் கருவை கலைத்து விட்டனர். இதை தொடர்ந்து என்னை பலரும் மிரட்டி வந்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
இது தொடர்பாக விசாரணை நடத்த மார்த்தாண்டம் மகளிர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மீது மகளிர் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். மேலும், கரு கலைப்பு செய்தவர் மீதும், இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, போலீஸ்காரர் கணேஷ்குமார், விஜின், அபிஷேக், உமேஷ், டாக்டர் கார்மல்ராணி, தேவராஜ், அனில்குமார் ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.