குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2021-12-05 18:46 GMT
நாகர்கோவில்:
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. 
அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல குமரி மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முக்கியமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பயணிகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
மேலும் ரெயில் தண்டவாளங்கள், ரெயில்வே பாலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இதுபோக ரெயில் நிலையத்துக்கு வந்த பார்சல்களையும் பரிசோதனை செய்து வருகிறார்கள். அத்துடன் கன்னியாகுமரி, குழித்துறை உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தங்கும் விடுதிகளில் ஆய்வு
அதோடு வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனை சாவடிகள் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவ வாய்ப்புகள் உள்ளதால், சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் மர்ம நபர்கள் யாரும் தங்கி உள்ளனரா என்றும் சோதனை நடத்தப்பட்டது. திருவள்ளுவர் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் குமரி மாவட்டம் அதிக கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடலோர கிராமங்களிலும் கண்காணிப்பு பணி நடக்கிறது. அதோடு மர்ம படகுகள் ஏதேனும் கடல் வழியாக வந்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமான போலீசாரின் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்