காரியாபட்டி,
காரியாபட்டி அருகே குட்டையில் பெண் சிசு பிணத்தை வீசி சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சிசு பிணம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது நாகனேந்தல் புதூர். இங்கு காட்டு பகுதியில் ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டையில் நேற்று பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்று தொப்புள் கொடியுடன் பிணமாக மிதந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்கள் இதுகுறித்து ஆவியூர் போலீஸ் நிலையத்திற்கும், காரியாபட்டி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குட்டையில் இறங்கி குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குட்டையில் குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? குழந்தை இறந்ததால் அதனை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.