மும்பை விமான நிலையத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தடுத்து நிறுத்தம்
நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட நடிகை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மும்பை,
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலியும், இந்தி நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், சுகேஷ் தனது காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு விலை உயர்ந்த குதிரை, பாரசீக பூனை உள்பட ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்களை பரிசாக அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் துபாய் செல்வதற்காக நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். துபாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் செல்ல இருந்ததாக தெரிகிறது. ஆனால் விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், விமான நிலையம் சென்று விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்பதால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அதையடுத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.