ஆபத்தான மரம் அகற்றப்பட்டது
நாகர்கோவில் புன்னைநகரில் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஒரு மரம் எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகள் மீது சாய்ந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் நின்ற மரத்தை வெட்டி அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சுகாதார சீர்கேடு
சுசீந்திரத்தில் மாலையில் இயங்கும் வாரசந்தையில் ஒரு கழிவறை உள்ளது. இந்த கழிவறையில் இருந்து கழிவுகள் செல்லும் குழாய் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கழிவறை சரியாக சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகிறது. இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், திக்கிலான்விளை.
காத்திருக்கும் ஆபத்து
நாகர்கோவில் தொல்லவிளையில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு சுவிட்ச் மற்றும் மீட்டர் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாக்சின் மூடி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு எளிதில் எட்டும் வகையில் மிகவும் தாழ்வாக இருப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.மோகன், தொல்லவிளை.
ஓடையை தூர்வார வேண்டும்
கருங்கல் ராஜீவ் ஜங்சன் பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடை மண் நிரம்பி காணப்பட்டது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடப்பட்டதன் அடிப்படையில் சிறிது தூரம் மண் அகற்றப்பட்டது. ஆனால், ஆர்.சி.தெரு முன்புறம் இருந்து துண்டத்துவிளை திருப்பு வரை வடிகாலில் மண் அகற்றப்படவில்லை. இதனால், மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.அகமது, கருங்கல்.
துண்டிக்கப்பட்ட சாலை
தடிக்காரன்கோணம் பகுதியில் இருந்து பால்குளம் க௫ம்பறைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த பகுதியில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
தெருவிளக்குகள் எரியவில்லை
குலசேகரபுரம் ஊராட்சியில் குலசேகரபுரம் ஊர் முதல் ஈத்தன்காடு வரை தெருவிளக்குகள் சரிவர பராமரிப்பு இன்றி எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் அந்த பகுதி மிகவும் இருட்டாக காணப்படுகிறது. இதனால், வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாக வரும் ஆண்களும், பெண்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யப்பன், குலசேகரபுரம்.
சாலையோரம் பள்ளம்
ராமன்புதூர் சந்திப்பில் சாலையோரம் ஒரு மின்கம்பத்தின் அருகே மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பள்ளத்தின் அருகில் உள்ள மின்கம்பமும் வலுவிழந்து சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாகிர் உசேன், ராமன்புதூர்.
ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பொட்டல்விலக்கு பகுதியில் உள்ள சம்பகுளத்தில் இருந்து பாயும் மறுகால் நீரானது செம்பட்டை ஓடை வழியாக பாய்கிறது. இந்த ஓடையானது வண்டாவிளை, அம்மாச்சியார்விளை, தர்மபுரம் வழியாக பண்ணையூரில் கடலில் கலக்கிறது. தற்போது இந்த ஓடையின் இருபக்கமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகலாக மாறி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஓடை காணாமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, ஈத்தாமொழி.