‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகள் அகற்றப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த பரசலூர் பகுதி மேலமுக்கூட்டு கடைத்தெரு பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் கலந்து குப்பைகள் கடைத்தெரு பகுதியில் தேங்கி விடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், மயிலாடுதுறை.
ஆபத்தான மின்கம்பம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை கிராமம் வடக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றவிட்டு புதிய மின்கம்பம் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-யோகேஸ்வரன், திருவாரூர்.
வீணாகும் குடிநீர்
திருவாரூர் வடக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாகி செல்கிறது. மேலும், வடக்கு மட வளாகத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்கவும், தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்திரஜெயன், திருவாரூர்.
ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் முடியமானங்கொண்டான் வடிகால் ஆற்றில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் வழிந்தோட வழியின்றி தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வயல்களில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அதிகளவில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் விஷபூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி வடிகால் ஆற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-ராமசாமி, வேதாரண்யம்.