அரசு பஸ்-சுற்றுலா வேன் மோதல்; டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம்
கொடைக்கானல் மலைப்பாதையில் அரசு பஸ்-சுற்றுலா வேன் மோதியதில் டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்.
தேவதானப்பட்டி:
கொடைக்கானல் மலைப்பாதையில் அரசு பஸ்-சுற்றுலா வேன் மோதியதில் டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்.
மலைப்பாதையில் விபத்து
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த முத்துராஜ் (வயது 30), ராமர் (32) உள்பட 9 பேர் வேன் ஒன்றில் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அந்த வேனை, அதே ஊரை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் (45) என்பவர் ஓட்டினார்.
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட்ட பிறகு, அங்கிருந்து திருப்புவனம் நோக்கி அவர்கள் திரும்பினர். கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில், டம்டம் பாறை அருகே சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வத்தலகுண்டுவில் இருந்து கொடைக்கானல் பழம்புத்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக சுற்றுலா வேனும், அரசு பஸ்சும் நேருக்குநேர் மோதியது. இதில் சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது.
10 பேர் படுகாயம்
இந்த விபத்தில் சுற்றுலா வேனில் வந்த டிரைவர் பிரபாகரன் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.