பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி (36). குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் மதுகுடிக்க தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் தர மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த குமார், தனது மனைவியை தாக்கியதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளில் மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் கொழுந்துவிட்டு எரிந்த தீ, வீட்டில் இருந்த மற்ற பொருட்களுக்கும் பரவியது. உடனே நீலாவதி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் நீலாவதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.