நிச்சயித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

நிச்சயித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தியில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-12-05 16:43 GMT
மயிலாடுதுறை:-

நிச்சயித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தியில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பெண்ணுடன் நிச்சயம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரை சேர்ந்த தங்கையன் மகன் சின்னத்தம்பி (வயது28). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை நிச்சயம் செய்தனர். 
இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அந்த பெண்ணை திடீரென காணவில்லை. அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு சின்னத்தம்பி பேசியபோது, அவர் தனக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி விட்டதாக கூறி உள்ளார். இதையடுத்து, ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது நிச்சயதார்த்தத்துக்கு செலவு செய்த ரூ.50ஆயிரம், சின்னத்தம்பி வாங்கித்தந்த தங்க சங்கிலி, செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருப்பி தந்துவிடுவதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். ஆனால் பொருட்கள் மற்றும் பணத்தை தராமல் சின்னத்தம்பி குடும்பத்தினரை, பெண்ணின் வீட்டார் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. 

போலீசில் புகார்

இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னத்தம்பி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாங்கள் செலவு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு மணல்மேடு போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி புகார் அளித்தனர். இந்த நிலையில் சின்னத்தம்பியை பெண்ணின் உறவினர் ஒருவர் செல்போன் மூலமாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்தும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மணல்மேடு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.  இதனால் விரக்தியில் இருந்த சின்னத்தம்பி நேற்று முன்தினம் இரவு எலிமருந்தை (விஷம்) கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்