சாலை தடுப்புச்சுவரில் மரக்கிளைகள்
கோவை வி.கே.கே. மேனன் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கம்பங்களில் உரசிய மரக்கிளைகள் வெட்டி அகற்றப் பட்டன. அந்த மரக்கிளைகள் சாலை தடுப்புச்சுவரில் போடப் பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்து நடக்கும் அபாயமும் நீடித்து வருகிறது. எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.
குமரேசன், கோவை.
பஸ் இயக்கப்படுமா?
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கேரளாவுக்கு சென்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக-கேரளா இடையே போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை கூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் கல்பட்டாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் இரு மாநில மக்களும் பாதிக்கப் பட்டு உள்ளனர். எனவே அங்கு பஸ்களை இயக்க வேண்டும்.
அப்துல்லா, கூடலூர்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
தெருவிளக்கு சரிசெய்யப்பட்டது
கோவை நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள சீவலபுரி அம்மன் நகரில் கடந்த 20 நாட்களாக தெருவிளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை ஒளிர செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
பழனிசாமி, சீவலபுரி அம்மன் நகர்.
சாலையில் குழிகள்
கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை அரசு கலைக்கல்லூரி விடுதி முன் உள்ள சாலையில் ஏராளமான குழிகள் உள்ளன. அதில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழிகள் இருப்பது தெரியவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இந்த சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும்.
கோகுல், கோவை.
குதிரைகள் நடமாட்டம்
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர் மில்ஸ், துடியலூர் பகுதியில் சாலையில் குதிரைகள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன. சாலையில் அங்குமிங்கும் சுற்றுவதால் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டைபோடுவதால் பொதுமக்களை தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றும் குதிரைகளை பிடிக்க வேண்டும்.
குமார், கோவை.
தேங்கி நிற்கும் மழைநீர்
கோவை சரவணம்பட்டி மாருதி நகரில் மழை காரணமாக குடியிருப்புக்கு செல்லும் வழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த 2 வாரமாக இதுபோன்று தண்ணீர் தேங்கி நிற்பதால், வீடுகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.
சங்கரன், மாருதி நகர்.
சேறும் சகதியுமான சாலை
கோவை சின்னியம்பாளையம் 10-வது வார்டு பகுதியில் மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் தற்போது இந்த சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து சிறு சிறு காயங்களுடன் தப்பித்து செல்கிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
முருகேஷ்குமார், சின்னியம்பாளையம்.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
கோவை சின்னவேடம்பட்டி அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதி வழியாக செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து வீதிக்குள் புகுந்து விடுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக இங்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
ரவி, குறிஞ்சி நகர்.
வேகத்தடை வேண்டும்
கோவை நேருநகர் பழனிசாமி காலனி குடியிருப்பு வழியாக கன ரக வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்து டன் சாலையும் பழுதடைந்து காணப்படுவதால், இருசக்கர வாகனங்களில் சளெல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைப்பதுடன், பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ரகு, நேருநகர்.
குப்பையாக மாறிய ஓடை
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஓடையில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த ஓடை யில் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளதால், மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்றுநோயும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஓடையை சுத்தம் செய்ய வேண்டும்.
ஜெகதீஷ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.
ஆபத்தான சாலை
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி நேதாஜிபுரம் மற்றும் சக்தி நகர் பகுதியில் உள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழிகள் சரிவர மூடப்படாத தால், அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு சாலை படு மோசமாக காட்சியளிக்கிறது. அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே ஆபத்தான இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ஜெகன், சிங்காநல்லூர்.