மேட்டுப்பாளையத்தில் கூலி தொழிலாளி அடித்துக்கொலை
மேட்டுப்பாளையத்தில் கூலி தொழிலாளி அடித்துக்கொலை
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் கூலி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தனிப்படை போலீசார் கொலையாளிகள் 6 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கூலி தொழிலாளி
மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (வயது 55). லாரி புக்கிங் ஆபீசில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அப்துல் காதர் ஜெய்லானி (33). கூலி வேலை செய்துவந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் இருசக்கர வாகனம் திருட்டு போய்விட்டது.
இந்த நிலையில் அந்த இரு சக்கர வாகனம் திருட்டுப்போனதற்கு அதே பகுதியை சேர்ந்த நாசர் என்கிற நாய்க்கார நாசர், முகமது ஆசாத், ஆசித், ரியாஸ், திவ்ய பிரகாஷ், அயூப் ஆகியோர் தான் காரணம் என்று ஜெய்லானி அக்கம், பக்கம் பேசி வந்ததாக நாசர் மற்றும் அவரது நண்பர்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் ஜெய்லானி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
வாய்த்தகராறு
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜெய்லானி மற்றும் அவரது தம்பி முகமது அன்சர் அலி (28) என்பவருடன் மேட்டுப்பாளையம- ஊட்டி மெயின் ரோடு காந்தி மைதானம் மாரியம்மன் கோவில் பின்புறம் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நாசர், முகம்மது ஆசாத், ஆசிப், ரியாஸ், திவ்ய பிரகாஷ், அயூப் ஆகியோர் அவரை தடுத்து நிறுத்தி இரண்டு சக்கர வாகனம் திருட்டு போனதற்கு நாங்கள் தான் காரணம் என்று நீ பேசி வருகிறாய். எங்களைப் பற்றி நீ ஏன் பேசுகிறாய் என்று கூறிஉள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
கொலை
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜெய்லானியை கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்கியும், அடித்ததாகவும் தெரிகிறது. இதில் அவர் படுகாயத்துடன் கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து அவரை தாக்கிய 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அப்போது அக்கம், பக்கத்தினர் ஜெய்லானியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் வலை வீச்சு
இதுகுறித்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார்.இந்த கொலையில் துப்பு துலக்க கோவையிலிருந்து போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. கோவையிலிருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து தடயங்களையும் சேகரித்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், குமார், முத்துப்பாண்டி மற்றும் போலீசார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தலைமறைவான கொலையாளிகள் 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.