நாகையில் பொலிவிழந்து காணப்படும் புதிய கடற்கரை பொதுமக்கள் வேதனை
நாகையில் புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
வெளிப்பாளையம்:-
நாகையில் புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
புதிய கடற்கரை
வங்க கடலோரம் அமைந்துள்ள எழில்மிகு நகரமாக நாகை திகழ்கிறது. நாகை நகரத்தையொட்டி சிக்கல், நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக நாகை நகர பகுதிக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
நாகை காடம்பாடி பகுதியில் புதிய கடற்கரை அமைந்து உள்ளது. பொழுதுபோக்கு தலமாக விளங்கும் புதிய கடற்கரைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினசரி வருகிறார்கள். நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் பலர் வருகின்றனர்.
சமூக விரோதிகளின் கூடாரம்
இந்த நிலையில் புதிய கடற்கரை கடந்த சில மாதங்களாக பொலிவிழந்து காணப்படுகிறது. கன மழையால் கடற்கரையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனயே இங்கு வர வேண்டி உள்ளது.
பொதுவாக மாலை நேரங்களில் நாகை புதிய கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கடற்கரை உரிய பராமரிப்பின்றி இருப்பதால் மக்கள் வருவது குறைந்து விட்டது. மின் விளக்குகள் ஒளிராததால், சமூக விரோதிகளின் கூடாரமாக நாகை புதிய கடற்கரை மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பராமரிப்பு பணிகள்
குழந்தைகளை இங்கு அழைத்து வருவதற்கு அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே பொலிவிழந்து காணப்படும் புதிய கடற்கரையில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மக்கள் அச்சமின்றி வந்து செல்லும் வகையில் கடற்கரையை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.