வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்

சிங்காரா, சீகூர் சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடைபெற்றது.

Update: 2021-12-05 14:23 GMT
கூடலூர்

சிங்காரா, சீகூர் சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு  பணி மும்முரமாக நடைபெற்றது.

2-வது கட்ட கணக்கெடுப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலநிலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய முதற்கட்ட கணக்கெடுப்பு முதுமலை புலிகள் காப்பகத்தின் உள் மண்டல பகுதியான நெலாக்கோட்டை, தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, மசினகுடி உள்ளிட்ட வனச்சரகங்களில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான சிங்காரா, சீகூர், நீலகிரி கிழக்கு பள்ளத்தாக்கு உள்ளிட்ட வனச்சரக பகுதியில் 2-வது கட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. வனச்சரகர் முரளி தலைமையில் 34 குழுக்களை சேர்ந்த வன ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

எச்சங்கள், தடயங்கள்

காலை 7 மணிக்கு தொடங்கிய கணக்கெடுப்பு மாலை 5 மணி வரை மும்முரமாக நடைபெற்றது. வனப்பகுதியில் தனித்தனி குழுவாக சென்று நேரில் பார்த்தல், அதன் கால் தடங்கள், எச்சங்கள் மூலம் வனவிலங்குகளை கணக்கெடுத்தனர். இந்த பணி வருகிற 10-ந் தேதி வரை  நடைபெற உள்ளது. 

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-பொதுவாக தாவர மற்றும் மாமிச உண்ணி என வனவிலங்குகள் 2 வகைப்படுத்தப்படும். மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக தென்பட்டால் வனம் செழுமையாக உள்ளது என்று கருதலாம். மேலும் புலிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு வாரம் நடைபெறும் கணக்கெடுப்பின் இறுதியில் சேகரித்த தகவல்களை கொண்டு தேசிய புலிகள் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்