நன்னடத்தை உறுதிமொழியை மீறிய வாலிபருக்கு 294 நாட்கள் சிறை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவரான காஞ்சீபுரம், துலங்கும்தண்டலம், சமத்துவபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மதன்ராஜ் (வயது 24) என்பவர் காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜராகி இன்னும் ஒரு வருடத்துக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி நன்னடத்தை பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால் மதன்ராஜ் அதையும் மீறி கடந்த மாதம் 24-ந்தேதி தனது நண்பர்களுடன் சித்தேரிமேட்டை சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பாலுச்செட்டிசத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நன்னடத்தை உறுதிமொழியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட மதன்ராஜை, அவர் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர்த்து மீதமுள்ள 294 நாட்கள் சிறையில் அடைக்கும்படி காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.