மந்திரிசபை மாற்றம் குறித்து பசவராஜ் பொம்மை முடிவு செய்வார்

மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்து பசவராஜ் பொம்மை முடிவு செய்வார் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.

Update: 2021-12-04 21:17 GMT
சிக்கமகளூரு: மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்து பசவராஜ் பொம்மை முடிவு செய்வார் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார். 

எடியூரப்பா பிரசாரம்

கர்நாடகத்தில் காலியாக உள்ள 25 மேல்சபை தொகுதிகளுக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தாவணகெரே தொகுதி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பிரசாரம் செய்தார். 
முன்னதாக தாவணகெரேயில் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

15 இடங்களில் வெற்றி

சித்தராமையா எதிர்க்கட்சி தலைவர் என்பதை மறந்துவிட்டு தனது வாய்க்கு வந்தபடி பேசுகிறார். தான் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பா.ஜனதாவை குறை கூறி, வாக்கு சேகரிக்கிறார். ஆனால் மக்கள் சுதாரித்து விட்டனர். சித்தராமையா கூறும் பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. காங்கிரசுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். 

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினர். அப்படி இருந்தும், சித்தராமையா பொய் பேசுவதை கைவிடவில்லை. எதிர்வரும் மேல்சபை தேர்தலில் பா.ஜனதா 15 இடங்களில் வெற்றி பெறும். மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தொடங்கி விட்டனர். 

பசவராஜ் பொம்மை முடிவு செய்வார்

கர்நாடகத்தில் மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்து பசவராஜ் பொம்மை தான் முடிவு செய்வார். யார், யாரை மந்திரிசபையில் சேர்க்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, நட்பு அடிப்படையில் தான் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  மேல்சபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி போட்டிகிடாத இடங்களில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று குமாரசாமியிடம் கேட்டுள்ளேன். 

பணம் பலம் உள்ளவர்களை வைத்து மட்டுமே தேர்தலை சந்திக்கக்கூடாது. மக்களிடம் ஆதரவு இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் வெற்றி பெற முடியும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்