கடைகளில் திருடிய 2 பேர் கைது

திருவட்டார், மார்த்தாண்டம் பகுதிகளில் கடைகளில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-04 18:39 GMT
திருவட்டார்,
திருவட்டார், மார்த்தாண்டம் பகுதிகளில் கடைகளில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடைகளில் திருட்டு
திருவட்டார் சந்தை அருகே சசி என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.8 ஆயிரம் திருடப்பட்டது. இதுபோல், அருகே உள்ள பத்மராஜ் என்பவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு  அங்கிருந்த ரூ. 7 ஆயிரம், விஜயகுமாரின் டீக்கடை உடைக்கப்பட்டு ரூ. 1,500 ஆகியவை திருட்டு போயிருந்தது. 
இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
2 பேர் சிக்கினர்
 இந்தநிலையில் நேற்று அதிகாலையில் திருவட்டாரில் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ேபாலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தனர். 
இதற்கிைடயே திருட்டு நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார் சைக்கிள் எண்ணும், தற்போது சிக்கியவர்களின் மோட்டார் சைக்கிள் எண்ணும் ஒன்றாக இருந்தது. 
கைது
இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குலசேகரம் அண்ணா நகரை சேர்ந்த எட்வின் செல்வம் (வயது50), கேசவன்புதூரை சேர்ந்த ஜெஸ்டின்ராஜ் (42) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் திருவட்டாரில் உள்ள 3 கடைகளில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், குலசேகரத்தில் உள்ள 4 கடைகளில் ரூ.12 ஆயிரம், அஞ்சுகிராமத்தில் ஒரு கடையில் ரூ.12,000, மார்த்தாண்டத்தில் ஒரு கடையில் ரூ.7 ஆயிரம் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  கைது செய்யப்பட்ட எட்வின் செல்வம் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்