திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மேலும் ஒரு புறக்காவல் நிலையம் திறப்பு

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மேலும் ஒரு புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2021-12-04 16:40 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக திருச்சி, திருப்பூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் ஏற்கனவே ஒரு புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் பணியில் உள்ளனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து கூடுதலாக ஒரு புறக்காவல் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மதுரை, தேனி பஸ்கள் நிற்கும் பகுதியில் மேலும் ஒரு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் போது அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு சுதாவை, புறக்காவல் நிலையத்தை திறந்து வைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
இதை சிறிதும் எதிர்பார்க்காத பெண் போலீஸ் ஏட்டு உற்சாகத்துடன் ரிப்பன் வெட்டி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க 24 மணி நேரமும் போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். அதேபோல் பொதுமக்கள், குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார். இதில் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்