‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் உலா வரும் மாடுகள்
பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லும் சாலையில் தினமும் ஏராளமானர்கள் நடந்தும், வானங்களிலும் சென்று வருகின்றனர். அந்த சாலையில் மாடுகள் உலா வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். அடிக்கடி வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- சந்திரசேகரன், கயத்தாறு.
சேறும், சகதியுமான சாலை
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பேரூராட்சி மல்லிகைநகரில் மண்சாைலயே உள்ளது. இதனால் மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால், பொதுமக்கள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, சிறுவர்கள், பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே சாைல அமைத்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- தங்கம், மல்லிகைநகர்.
ஆற்றில் கலக்கும் கழிவுநீர்
நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் பாலத்துக்கு அடியில் தாமிரபரணி ஆற்றில் வந்து சாக்கடை கழிவுகள் கலக்கின்றன. இதனால் ஆற்றில் குளிக்கும் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். தோல் நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- மாரிகண்ணன், வண்ணார்பேட்டை.
பஸ்சுக்குள் ஒழுகும் மழைநீர்
தென்காசியில் இருந்து சம்பன்குளத்துக்கு வழித்தடம் எண்-30 பஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பஸ்சில் மேற்கூரை பழுதடைந்து இருப்பதால், மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் நனைந்து சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆகையால் பஸ்சின் மேற்கூைரயை சீரமைத்தால் அது பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
- திருக்குமரன், கடையம்.
சாலை சீரமைக்கப்படுமா?
கடையநல்லூரில் தென்காசி-மதுரை சாலை ஆங்காங்கே பள்ளங்களுடன் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த சாலை போக்குவரத்து நிறைந்த முக்கியமான சாலை ஆகும். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளிலும் சிக்குகின்றனர். இந்த அவலத்தை போக்க சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- எஸ்.கே.எம்.ஹபிபுல்லா, கடையநல்லூர்.
* கீழப்பாவூர் யூனியன் குணராமநல்லூர் ஊராட்சி கடபோகாத்தி கிராமத்தில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருதால், சாலை மேலும் மோசமடைந்து உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.
- இசக்கியப்பன், கடபோகாத்தி.
நோய் பரவும் அபாயம்
சங்கரன்கோவில் களப்பாகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதிநகர் பகுதியில் வாறுகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து திறந்துவெளியில் ஓடுகிறது. மேலும் குப்பைகளும் சரிவர அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகால் வசதி ஏற்படுத்துவதுடன் குப்பை தொட்டிகளை வைத்து குப்பைக்கழிவுகளை முறையாக அகற்றவும் உரிய நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.
- விவேக், பாரதிநகர்.
மழைநீரை அகற்ற வேண்டும்
சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பாவநாசபுரத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் வடபுறத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- ஆறுமுகச்சாமி, பாவநாசபுரம்.
எரியாத மின்விளக்கு
தூத்துக்குடி மாநகராட்சி 3-வது மைல் புதுக்குடி 2-வது தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட எல்.இ.டி. தெரு விளக்கு சுமார் ஒருமாத காலமாக எரியவில்லை. மேலும், அந்த மின்கம்பம் சிமெண்டு சாலையின் நடுப்பகுதியில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள், மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் அதிகாரிகள் மின்கம்பத்தை சாலையோரம் அமைப்பதுடன் மின்விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- மருதபெருமாள், தூத்துக்குடி 3-வது மைல்.
மழைநீர் தேங்காமல் சாலை அமைக்கப்படுமா?
தூத்துக்குடி மாநகராட்சி முத்தம்மாள் காலனி 3-வது தெருவில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜல்லிக்கற்களை சரிவர விரிக்காமல் மேடும், பள்ளமுமாக மழைநீர் தேங்கும் வகையில் சாலை போடப்படுகிறது. எனவே, ஒரே மட்டத்திற்கு ஜல்லிக்கற்களை விரித்து அதற்கு மேல் தார்சாலை அமைத்தால் மழைநீர் சாலையில் தேங்காமல் தடுக்கப்படும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- மகேஸ்வரி, தூத்துக்குடி.