வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை
வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலப்படம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உருண்டை வெல்லம், நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லம், கருப்பட்டி தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு வெல்லம் வெண்மையாக இருப்பதற்காக சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட், காஸ்டிக் சோடா மற்றும் இதர வேதிப்பொருட்களும், மைதா, ரேஷன் அரிசி மற்றும் அஸ்கா சர்க்கரை ஆகியவை அதிகளவில் கலப்படம் செய்து தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
கெமிக்கல் கலந்த வெல்லத்தை பொதுமக்கள் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தரமான முறையில் கலப்படமில்லாத வெல்லம், நாட்டுச்சர்கரை மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களுடைய தயாரிப்பு மற்றும் இருப்பு கூடங்களில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு கண்காணிப்பு கேமரா பொருத்தாத உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடும் நடவடிக்கை
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டப்படி இனிவருங்காலங்களில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்ற தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் ஏதேனும் கண்டறியப்படுமானால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் உணவுப்பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் அலுவலகத்தில் உள்ள 0424-2223545 என்ற தொலைபேசி எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.