கூடலூரில் 152 பானைகளில் பொங்கல் வைத்து கவனத்தை ஈர்த்த பொதுமக்கள்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கூடலூரில் பொதுமக்கள் 152 பானைகளில் பொங்கல் வைத்து அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

Update: 2021-12-04 15:08 GMT
கூடலூர்:
கூடலூர் நகர அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை ஆகிய 3 தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும், லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் நேரடியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 
இதற்கிடையே இந்த கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நேற்று கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில் முன்பு 152 பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். இதில் வக்கீல்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க செயலாளர் சதீஷ்பாபு ஆகியோர் உள்பட அனைத்து விவசாயிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்