கனமழையால் சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

கொட்டித்தீர்த்த கனமழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2021-12-04 15:01 GMT
உத்தமபாளையம்:
கொட்டித்தீர்த்த கனமழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
சுருளி அருவி
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது, சுருளி அருவி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது வழக்கம். மேலும் இந்த அருவியில் குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருவார்கள். 
அதேபோல் கார்த்திகை, தை மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் சுருளி அருவியில் குளித்துவிட்டு செல்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.
திடீர் வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாகவே தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சுருளி அருவியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு சுருளி அருவி மலையில் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று காலை அருவியில் திடீரென்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
குறிப்பாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளே தெரியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல் அருவி பகுதிக்கு நடந்து செல்லும் படிக்கட்டுகளிலும் தண்ணீர் பாய்ந்தோடியது. 
பொதுமக்கள் ஓட்டம்
இதற்கிடையே நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சுருளி அருவியையொட்டியுள்ள ஆற்றில் பொதுமக்கள் சிலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளம் கரைபுரண்டு வந்ததை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். சுமார் 3 மணி நேரமாக வெள்ளப்பெருக்கு குறையவில்லை. ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவில் சென்றது. பின்னர் மதியம் நீர்வரத்து சற்று குறைந்தது.  
வெள்ளப்பெருக்கு குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். முன்னதாக  தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆற்றில் பொதுமக்களை இறங்கவிடாமல் தடுத்தனர். மேலும் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்