பெருந்துறை வாரச்சந்தையில் உரிய விலை கிடைக்காததால் 15 ஆயிரம் தேங்காய்களை திரும்ப எடுத்து சென்ற விவசாயிகள்

பெருந்துறை வாரச்சந்தையில் உரிய விலை கிடைக்காததால் 15 ஆயிரம் தேங்காய்களை விவசாயிகள் திரும்ப எடுத்து சென்றனர். மேலும் தேங்காய்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-12-04 14:44 GMT
பெருந்துறை வாரச்சந்தையில் உரிய விலை கிடைக்காததால் 15 ஆயிரம் தேங்காய்களை விவசாயிகள் திரும்ப எடுத்து சென்றனர். மேலும் தேங்காய்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
வாரச்சந்தை
பெருந்துறை வாரச்சந்தை வழக்கம்போல் நேற்று கூடியது. இந்த சந்தைக்கு பெருந்துறை, கோபி, கொளப்பலூர், வெள்ளாங்கோவில், கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 30 ஆயிரம் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
இதில் முதல் தரம் தேங்காய் 17 ரூபாய் முதல் 18 ரூபாய் வரையும், 2-ம் தரம் தேங்காய் 15 ரூபாய் முதல் 16 ரூபாய் வரையும், 3-ம் தரம் தேங்காய் 12 ரூபாய் முதல் 14 ரூபாய் வரையும்           விற்பனை ஆனது. 
15 ஆயிரம் தேங்காய்களை...
பெருந்துறை வாரச்சந்தையில் பொதுவாக பெரிய தேங்காய் ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.25 வரை விற்பனை ஆகும். ஆனால் நேற்று பெரிய தேங்காய் ஒன்று அதிகபட்ச விலையாக 18 ரூபாய் வரை விற்பனை ஆனது. 
தேங்காய் விலை எதிர்பார்த்ததை விட குறைந்து விற்பனையானதால் 15 ஆயிரம் தேங்காய்களை விற்காமல் விவசாயிகள் திரும்ப எடுத்து சென்றனர். இதனால் தேங்காய்கள் மொத்தம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. 
ரூ.5 வரை லாபம்
தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காதது குறித்து, தென்னை விவசாயி ஒருவர் கூறுகையில், ‘ஆண்டு முழுவதும் தென்னை மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, தேங்காயை மரத்தில் இருந்து பறித்து, மட்டை உரித்து, வண்டி வாடகை கொடுத்து, இறுதியாக அதை சந்தைக்கு கொண்டு வந்தால், எங்களுடைய உழைப்புக்கு ஏற்ற நியாயமான விலை கிடைப்பதில்லை. ஆனால் சந்தையில் எங்களிடம் தேங்காயை குறைந்த விலைக்கு வாங்கும் மொத்த வியாபாரி, அதை ஒரு லாபம் வைத்து, சில்லரை வியாபாரிகளுக்கு உடனே விற்று விடுகிறார். அந்த சில்லரை வியாபாரி, தேங்காய் ஒன்றுக்கு ரூ.5 வரை லாபம் பார்த்து விற்றுவிடுகிறார். இவை அனைத்தும் ஒரு வார காலத்துக்குள் நடந்து விடுகிறது. ஒரு வாரத்தில் வியாபாரிகளுக்கு கிடைக்கும் லாபம், ஆண்டு முழுவதும் பாடுபட்ட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. 
குறைந்தபட்ச விலை
எனவே தேங்காய்களுக்கு குறைந்தபட்ச விலையை அரசே நிர்ணயம் செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்தால் எங்களை போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,’ என்றார்.  

மேலும் செய்திகள்