புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2021-12-04 14:17 GMT

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
மின்கம்பிகள் மீது படர்ந்த கொடிகள் அகற்றம்
கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கு அருகே செல்லும் மின்கம்பிகள் மீது செடி, கொடிகள் படர்ந்து இருந்தது. இது தொடர்பாக ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டி பிரிவில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்கம்பிகள் மீது படர்ந்து இருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. இதனால் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
முத்துவேல், கோத்தகிரி.

ஒளிராத மின்விளக்கு
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நகராட்சி சர்க்கஸ் மைதானம் அருகே உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள மின்விளக்கு கடந்த சில நாட்களாக ஒளிரவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளதால் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஸ், பொள்ளாச்சி.

வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சியை அடுத்த ராசக்காபாளையத்தில் இருந்து ஆலாம்பாளையம் செல்லும் ரோட்டில் சாய்கார்டன், திருமலை கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இருந்து தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், ராசக்காபாளையம்.

கோவிலில் காட்டெருமைகள் முகாம்
கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் கட்டெருமைகள் முகாமிட்டு உள்ளன. அவை கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்கி விடும் அபாயம் நிலவுகிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர், மிளிதேன்.

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்
இடிகரை பேரூராட்சி கலாம் நகரில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால், தண்ணீர் நிறைந்து வெளியே செல்ல வழி இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுப்புழுக்கள் உருவாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி சாலையை சீரமைக்க வேண்டும்.
ராஜதுரை, இடிகரை. 


விஷ ஜந்துக்களின் புகலிடம்
கவுண்டம்பாளையத்தில் இருந்து டி.வி.எஸ். நகர் செல்லும் சாலையில் சரவணா நகர் சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. அங்கு நீண்ட நாட்களாக தள்ளுவண்டி ஒன்றும் நித்தப்பட்டு இருக்கிறது. அதன் அடியில் சாக்கு மூட்டை உள்ளிட்ட பொருட்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அது பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் புகலிடமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு முட்புதர்களை அகற்றி , கிடப்பில் கிடக்கும் தள்ளுவண்டியை அப்புறப்படுத்த வேண்டும்.
மணி, சரவணா நகர். 

சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரம் பிரிவு ராஜகணபதி நகரில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இங்குள்ள பூங்கா நிலத்தில் குப்பைகள் மொத்தமாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால், அவை நனைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகள் கொட்டாமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கே.எஸ்.குணசேகரன், ராஜகணபதி நகர். 

குண்டும், குழியுமான சாலை
கோவை டி.வி.எஸ். நகரில் இருந்து கவுண்டம்பாளையம் பாலம் சந்திப்பு வரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், கவுண்டம்பாளையம். 


கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
கோத்தகிரியில் இருந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அரசு பஸ்சில் சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் போதுமான பஸ்கள் இயக்கபடாததால் அவர்கள் பஸ்சில் நின்றுக்கொண்டு பாதுகாப்பின்றி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் காலை 7.45 மணிக்கு கூடுதலாக பஸ் ஒன்றை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வின்சென்ட், கோத்தகிரி.

சாலையில் பள்ளம்
கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அரசு கலைக்கல்லூரி விடுதி முன்பு உள்ள சாலையில் ஏராளமான பள்ளங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் இருக்கும் பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோகுல், கோவை.

குதிரைகள் அட்டகாசம்
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர்மில்ஸ், துடியலூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே குதிரைகள் அட்டகாசத்தை தடுத்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
குமார், துடியலூர்.

மேலும் செய்திகள்