தென்காசியில் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல் 3 பெண்கள் உள்பட 48 பேர் கைது
கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்
தென்காசி:
தென்காசி மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், பழைய பஸ் நிலையம் முன்பு நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். கட்டுமான தொழில் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் சட்டங்களைத் திருத்த கூடாது. கட்டுமான தொழிலாளர்கள் நல பயன்களை பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்டத் திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும். இந்த தொழிலாளர்களின் சேமநல நிதியை இவர்களது நலனுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கசமுத்து, முருகையா, பிச்சுமணி, பொன் செல்வம், மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் அயூப்கான், துணைத்தலைவர்கள் கிருஷ்ணன், வன்னிய பெருமாள் ஆகியோர் பேசினார்கள். அப்போது தென்காசி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 48 பேரை கைது செய்தனர்.