கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்று சிகிச்சைக்கு 30 படுக்கைகளுடன் தனி வார்டு
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்று சிகிச்சைக்கு 30 படுக்கைகளுடன் தனி வார்டு நேற்று தொடங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்று சிகிச்சைக்கு 30 படுக்கைகளுடன் தனி வார்டு நேற்று தொடங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் அசோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் புதிய வடிவம் பெற்று ஒமைக்ரான் வைரசாக உருமாறி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது.
கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தை ஒட்டி உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகள் கொண்ட ஒமைக்ரான் சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலின்படி வெளிநாடுகளில் இருந்து வருவோர் ஒருவாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு ஒமைக்ரான் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போடாத 4.20 லட்சம் பேர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை இன்னமும் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். மேலும் முககவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 350 பேர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போடாதவர்களும் விரைவில் தடுப்பூசி போட வேண்டும்.
அப்போது தான் புதிய வகை கொரோனாவை நாம் எதிர்கொள்ள முடியும். ஒமைக்ரான் வைரசால் பாதிப்பு அடைந்தாலும் ஆக்சிஜன் தேவையோ, உயிரிழப்புகளோ இல்லாமல் தடுக்கலாம். கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரியில் இருந்த, 300 படுக்கைகளை 600 படுக்கைகளாக அதிகப்படுத்தி உள்ளோம். அதேபோல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும், 2,000 படுக்கைகளுக்கு மேல் தயார் நிலையில் உள்ளன.
அச்சப்பட தேவையில்லை
கொரோனா முதல் அலையும், இரண்டாவது அலையும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தின. ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. தற்போது உள்ள ஒமைக்ரான் வீரியம் குறித்து இன்னும் சில தினங்கள் கழித்தே தெரியவரும். அதற்கு முன்னர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தற்போது, 100 வெண்டிலேட்டர்கள் மற்றும் 13 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரியில் தற்போது 100 படுக்கைகள் மட்டும் கொரோனா வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 20 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே புதிய வகை வைரசை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உடனடியாக தடுப்பூசி மற்றும் அரசு கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து 3-ம் அலை, ஒமைக்ரான் வைரசில் இருந்து காத்து கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மருத்துவர்கள் ஸ்ரீதரன், செல்வி, நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.