தரமற்ற மாத்திரைகள் தயாரித்து விற்பனை: தனியார் மருந்து நிறுவன உரிமையாளருக்கு அபராதம் சேலம் கோர்ட்டு தீர்ப்பு
தரமற்ற மாத்திரைகள் தயாரித்து விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திராவை சேர்ந்த தனியார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்,
அதிகாரிகள் ஆய்வு
சேலம் மாநகரில் உள்ள மருந்துகள் வினியோகம் செய்யும் ஏஜென்சிகளில் மருந்து, மாத்திரைகள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள மருத்துவத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து சேலம் மருந்துகள் ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி சேலம் முதல் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து ஏஜென்சி நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை ஆய்வு மேற்கொண்டபோது, ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க கூடிய குளோபெஸ்ட் என்ற மாத்திரைகள் தரமானதாக இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாத்திரைகளை தரம் ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்து சென்றனர். அந்த மாத்திரைகள் எங்கிருந்து தயாரிக்கப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தியதில் திரிவேணி பார்முலேசன் லிமிடெட் என்ற பெயரில் மருந்து நிறுவனம் ஆந்திர மாநிலம் சூரம்பள்ளி என்ற இடத்தில் செயல்பட்டு வருவதும், அதன் நிர்வாக இயக்குனராக வாசுதேவகுப்தா என்பவர் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.
ரூ.40 ஆயிரம் அபராதம்
இதையடுத்து அவர் மீது சேலம் மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், தரமற்ற மாத்திரைகளை தயாரித்து விற்பனை செய்ய வைத்திருந்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவ குப்தாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு நாள் காவல் தண்டனையும், அவரது நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு கலைவாணி உத்தரவிட்டார்.