நிலையூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது.
மன்னர் காலத்து கண்மாய்
மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் நிலையூர் கண்மாயும் ஒன்று. மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கண்மாயானது சுமார் 700 ஏக்கர் பரப்பளவும், சுமார் 27 அடி ஆழமும் ெகாண்டது. குடிநீர் ஆதாரத்திற்கும், 20 கிராமங்களின் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும் வாழ்வாதாரமாக உள்ளது. கனமழை பெய்யும் பட்சத்திலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் பட்சத்திலும் இந்த கண்மாய் நிரம்பும்.
3 ஆண்டுகளுக்கு பிறகு மறுகால்
அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டில் நவம்பர் மாதம் 20-ந் தேதி அன்று கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையாலும், நிலையூர் கால்வாய் வழியாக உபரி மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக பாய்ந்து வந்ததாலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்மாய் கடந்த 2-ந்தேதி முதல் நிரம்பி சிறிய கழுங்கு வழியாக மறுகால் பாய்ந்தது.
இதனையடுத்து சொக்கநாதன்பட்டி, கப்பலூர், விடத்துக்குளம், விரிசங்குளம், எட்டு நாழி பகுதிகளை சார்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்களாகவே புதர்மண்டி கிடந்த கால்வாயை வெட்டி சீரமைத்து தங்களது கண்மாய்களுக்கு தண்ணீரை பாசனத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மறுகால் பாயக்கூடிய தண்ணீரானது கால்வாய் வழியாக குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.