கர்நாடக மந்திரிசபை 10-ந்தேதிக்கு பிறகு மாற்றம்; பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்
கர்நாடக மந்திரிசபையில் வருகிற 10-ந் தேதிக்கு பிறகு மாற்றம் ஏற்படும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மந்திரிசபையில் வருகிற 10-ந் தேதிக்கு பிறகு மாற்றம் ஏற்படும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிலருக்கு அதிருப்தி
எடியூரப்பாவை மாற்றிவிட்டு பசவராஜ் பொம்மையை முதல்-மந்திரியாக நியமனம் செய்ததால் சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். நிதி ஒதுக்கீடு விஷயத்திலும் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு நிதி ஒதுக்குவதாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அதன்படி நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் முதல்-மந்திரி மீது அதிருப்தி மேலும் அதிகரிக்கும்.
வருகிற 10-ந் தேதிக்கு பிறகு மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும். முதல்-மந்திரி மாற்றம் நிகழாது. மந்திரி ஈசுவரப்பா குறிப்பிட்ட முருகேஷ் நிரானி முதல்-மந்திரி ஆக முடியாது. மந்திரிகள் பலர் விதான சவுதாவுக்கு வருவது இல்லை. குஜராத்தை போல் மந்திரிசபையை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். சரியாக பணியாற்றாத மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளவர்களை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும்.
மந்திரிசபையை மாற்றி...
கட்சியில் சிறப்பாக செயல்படும் இரண்டாம் கட்ட தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். மந்திரிசபையை மாற்றி அமைப்பதற்கு முன்பு கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளையும் பசவராஜ் பொம்மை கேட்டு அறிய வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மந்திரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். மந்திரிகள், பசவராஜ் பொம்மையை சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பணியாற்றவில்லை என்றால், வரும் நாட்களில் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் ஊரடங்கை அமல்படுத்தவே கூடாது. நோய் பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறினார்.