ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 13 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு
ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு
ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஆகும்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உள்பட 23 -க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமுறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தத் தொற்று விரைவாக பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்க கூடிய தன்மை உடையது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
இதனால் ஒமைக்காரன் வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் வீட்டில் ஒருவார காலம் தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டும் பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே நடமாட அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 13 பேர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முடிந்து நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் அவரவர் வீடுகளுக்கு வந்துள்ளனர். எனினும் அவர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சென்று கண்காணித்து வருகின்றனர்.
ரத்த மாதிரி
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
வெளிநாடுகளில் இருந்து 13 பேர் விமானம் மூலம் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஒரு வாரம் கழிந்ததும் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவு வந்தால் அவர்கள் வெளியே நடமாடலாம்.
வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக அவர்களது சளி, ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.