போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தாக்குதல்
மதுரை கூடல்நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ஓய்வு ெபற்ற தலைமை ஆசிரியர். இவர், மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் கடந்த 11.1.2007 அன்று எனக்கு சொந்தமான கட்டிடத்தின் முன்பு நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகீலா (இவர் தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக உள்ளார்) மற்றும் போலீசார், என் வீட்டின் முன்பு கொட்டப்பட்டிருந்த மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர். இதை என் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிப்பதற்காக சென்றேன்.
அப்போது போலீசார் என் வீட்டினுள் வந்து என்னையும், என் குடும்பத்தினரையும் தாக்கினர். என்னையும், என் மகனையும் போலீஸ் வேனில் ஏற்றிச்சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து அரை நிர்வாணமாக்கினர். எங்கள் விஷயத்தில் மனித உரிமை விதி மீறல் நடந்துள்ளது. இதற்காக போலீசார் மீது நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
ரூ.10 ஆயிரம் அபராதம்
இதற்கிடையே, தன் மீது நாராயணசாமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்தும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் சகீலா, இதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சகீலாவின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தர காமேஷ் மார்த்தாண்டன், மனுதாரர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. மனுதாரரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. இதுபோன்ற நடவடிக்கையை ஊக்குவிக்க முடியாது.
எனவே மனுதாரர் சகீலாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர், பிரதான மனுதாரரான நாராயணசாமிக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.