‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-03 19:00 GMT
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் 20-வது வீதியில் உள்ள சாக்கடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாக்கடையில் தேங்கிய குப்பைகளை அகற்றினர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஷாகுல்ஹமிது, புதுக்கோட்டை.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம் ராமசந்திரா நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் அந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை தொட்டி வைப்பதுடன், அதனை உடனுக்குடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோகு, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி  வார்டு எண்-5, களப்பக்காடு சிலோன் காலனி நகராட்சி சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
வனஜா, புதுக்கோட்டை.
விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி 15-வது வார்டில் உள்ள விளையாட்டு மைதானத்தை சிலர் ஆக்கிரமித்து சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல் சிலர் மைதானத்தில் அசுத்தம் செய்து வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ், கரூர்.
பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி அருகே மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும்.
சுரேஷ், புதுக்கோட்டை.
உருக்குலைந்த சாலை சீரமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி  பாளையம் 4-வது வார்டில் உள்ள தார்சாலை உருக்குலைந்து உள்ளது. மேலும், தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்.
விஜயா, பெரம்பலூர்.
அரசு பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையிலிருந்து காலை 10 மணியளவில் அறந்தாங்கி, நாகுடி, திருவப்பாடி, சிங்கவனம் வழியாக மணமேல்குடி செல்லும் அரசு பஸ் கடந்த ஒரு ஆண்டுகளாக இயக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காசிவிஸ்வநாதன், புதுக்கோட்டை.

மேலும் செய்திகள்