வேலூர் அருகே வாந்தி பேதியால் சிறுவன் உள்பட 4 பேர் பலி

வேலூர் அருகே வாந்தி பேதியால் சிறுவன் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-12-03 17:59 GMT
அடுக்கம்பாறை

பென்னாத்தூர் வேலூர் அருகே வாந்தி பேதியால் சிறுவன் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.

சிறுவன் உள்பட 4 பேர் பலி

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பாசாமி (வயது 70) என்பவருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. அதேபோல் கலீத்குமார் (4) என்ற சிறுவனுக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய முதியவர் மற்றும் சிறுவன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது அதே கிராமத்தில் வசிக்கும் சுமார் 20 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. அவர்களும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கலெக்டர் ஆய்வு 

தகவலறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார், சப்-கலெக்டர் விஷ்ணுபிரியா, வேலூர் தாசில்தார் செந்தில், துணை தாசில்தார் சுரேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன், கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் அருள்நாதன், கணியம்பாடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராகவன், பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் உலகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை அல்லிவரம் கிராமத்திற்கு நேரில் சென்று நோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பலியான சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். 

கழிவுநீர் கலந்தது

அப்போது கிராம மக்கள் கூறுகையில், கிராமத்தில் உள்ள குளத்தில் தேங்கிய மழைநீர் வெளியே செல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சப்தலிபுரம் ஏரி நிரம்பியதை அடுத்து, அந்த ஏரியின் உபரிநீர் இந்த குளத்திற்கு வருகிறது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சப்தலிபுரம் ஏரியில் கலக்கிறது. தற்போது தொடர்மழை காரணமாக ஏரி நிரம்பியதால் கழிவுநீர் கலந்த மழைநீர் அல்லிவரம் குளத்திலும் வந்து தேங்கியுள்ளது. 

15 நாட்களுக்கு மேலாக குளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால், நிலத்தடி நீர்மட்டத்தில் கழிவுநீர் கலந்த மழைநீர் குடிநீரில் கலந்திருக்கலாம். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
சுகாதார குழுவினர் முகாமிட்டு சிகிச்சை

இதைத்தொடர்ந்து அல்லிவரம் குளத்தில் தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து பொக்லைன் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. அல்லிவரம் கிராமத்தில் சுகாதார குழுவினர் 24 மணி நேரமும் முகாமிட்டு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். வாந்தி, பேதியால் அப்பாசாமி, சிறுவன் கலீத்குமார், வள்ளியம்மாள் மற்றும் குப்பம்மாள் ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டப்போது சிறுவன் கலீத்குமார் மட்டுமே வாந்தி, பேதியால் உயிரிழந்துள்ளான். மீதமுள்ள 3 பேர் வெவ்வேறு காரணங்களில் உயிரிழந்துள்ளனர். ஏரியில் உள்ள மீன்களை சமைத்து சாப்பிட்டதாக கூறுகின்றனர். இதனால் கூட கிராம மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கலாம். எனவே அவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவை ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் இறப்புக்கான காரணம் தெரியவரும். மேலும் கிராமத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து, பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

குடிநீர் ஆய்வு

கிராமத்தில் தொடர்ந்து இதுபோன்ற பாதிப்பு பரவி வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் அங்கு முகாமிட்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வாந்தி, பேதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் காலரா நோய் பாதிப்பாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அந்த கிராமத்திற்கு சப்ளை செய்யப்படும் குடிநீரை, அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்